இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழான அடுத்த கட்ட கடன் மதிப்பீட்டுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு இன்று (10) இலங்கை வரவுள்ளது.
இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள இந்தக் குழு, எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் 7ஆவது மதிப்பாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின் நிறைவில் சர்வதேச நாணய நிதியக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் மீட்சியை மேலும் வலுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில், பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை IMF குழு இந்த விஜயத்தின்போது விரிவாக மதிப்பாய்வு செய்யவுள்ளது.
அத்துடன், நாட்டின் பேரண்டப் பொருளாதாரத்தில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் குழுவினர் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவான் பாப்பஜோர்ஜியோ தலைமையிலான IMF தூதுக்குழு, கடந்த ஜூன் 24 முதல் 30ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, இந்த செப்டெம்பர் மாத விஜயத்தை மேற்கொள்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.









