சிறுவர்களுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, அவர்களின் சம்மதத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என சிறுவர்கள் உரிமை செயற்பாட்டாளர் வைத்தியர் துஷாரா விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
‘நல்ல தொடுதல், தவறான தொடுதல்’ என்ற பாரம்பரிய கருத்துடன், தங்களைத் தொடுவது குறித்து சிறுவர்கள் வசதியாக உணர்கிறார்களா என்பதைத் தீர்மானிக்கும் அவர்களின் உரிமையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் சிறுவர்கள் தொடர்புடைய இரண்டு புகைப்படங்களுடன் சமூக ஊடகப் பதிவொன்றை வெளியிட்ட அவர், சிறுவர்களின் சம்மதமின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல் ரீதியான தொடர்பும் பொருத்தமற்றதாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த தொடர்பை விமர்சித்த அவர், அது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இலங்கையில் சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான பரந்துபட்ட கவலைகளை இது எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது புகைப்படம், ‘Stop Child Cruelty Trust’ அமைப்பினால் சுமார் 40,000 கையெழுத்துகளைக் கொண்ட மனுவொன்று நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஒரு சிறுவனிடம் “உனது தோள்களில் எனது கைகளை வைப்பது சரியா?” எனக் கேட்ட பின்னர், சிறுவனின் தோள்களில் தனது கைகளை வைத்ததாக துஷாரா விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறுவனிடம் இவ்வாறு சம்மதம் கோரப்பட்டதைக் கேட்டு தான் ஆச்சரியமடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், சிறுவர்களின் சம்மத உரிமையை மதிப்பதற்கான ஓர் உதாரணமாக இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடல் ரீதியான தொடர்புகளை வெறுமனே ‘நல்ல தொடுதல்’ அல்லது ‘தவறான தொடுதல்’ என வகைப்படுத்துவதற்கு அப்பால், சிறுவர்களின் சம்மதத்தை மதிக்க வேண்டும் என்பதே தெரிவிக்கப்பட வேண்டிய முக்கியமான செய்தி என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கவோ அல்லது மறுக்கவோ உரிமை வழங்குவது, அவர்களை வலுப்படுத்துவதுடன், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களின் விருப்பத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொடுதலும் ‘தவறான தொடுதலாக’ மாறக்கூடும் அல்லது சிறுவர்களின் உரிமை மீறலாக அமையக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். சிறுவர்களின் உரிமைகள் மற்றும் ‘இல்லை’ என்று கூறுவதற்கான அவர்களின் உரிமை குறித்து முறையான புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் எனவும், சிறுவர்களின் தனிப்பட்ட எல்லைகளை மதிப்பது தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரியவர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.









