அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து புறப்பட்ட இந்த சரக்கு விமானம், பிற்பகல் 2 மணியளவில் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது.இதையடுத்து விமானம் விமான நிலையத்தைச் சூழவுள்ள பிற வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் வீதியைக் கடந்து சென்று அங்கிருந்த வாகனங்களுடன் மோதியதாகவும், இதன்போது விமானம் தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பது தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.









