முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசாங்கம் இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் பலவீனப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் இறையாண்மையை பாதுகாப்பதையும், அரசியலமைப்பின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதையும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் மையமாகக் கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டதையும், கட்சியின் தலைமைப் பதவிக்கு சேனாநாயக்கவின் பெயரை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க முன்மொழிந்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், டி.ஏ. ராஜபக்ஷவும் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததாகவும், அவரது இரு மகன்கள் பின்னர் இலங்கையின் ஜனாதிபதிகளாக பதவி வகித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய செயற்பாடுகள் இந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவை நினைவுகூரும் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் கட்சி மாநாடு நடைபெறும் எனவும், அதில் 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற புதிய சிந்தனைகள், கொள்கைகள் மற்றும் புதிய முகங்களுடன் நவீன ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 3ஆவது சரத்தின்படி இறையாண்மை மக்களுக்கே உரியது என்றும் அது பிரிக்க முடியாதது என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தமது நிலைப்பாட்டின்படி அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள், அரசியல்வாதிகளின் கைதுகள் மற்றும் சுயாதீன தொழில்சார் அமைப்புகள் மீதான தாக்குதல்கள் நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும், இவை எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதாகவும் ரணில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கம், மருத்துவத் துறையினர் மற்றும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் நடவடிக்கைகளையும் அவர் விமர்சித்துள்ளார்.
“இந்த நாடு நாடாளுமன்றத்திலிருந்து ஆளப்படுகிறதா அல்லது பெலவத்தையிலிருந்து ஆளப்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், டி.ஏ. ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக இருந்ததை சுட்டிக்காட்டியதுடன், நாமல் ராஜபக்ஷ அவரது பேரன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடையில் உள்ளார். இதற்கும் நாங்கள் எமது எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.








