026 உலகளாவிய விழிப்புணர்வுமிக்க உணவு முறைமைகள் மாநாட்டில் (Global Summit on Conscious Food Systems) பங்கேற்பதற்காக பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
ஓகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உயர்மட்ட சந்திப்புகளில் பிரதமர் ஈடுபட்டார்.
இதன்போது, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக்கை சந்தித்த பிரதமர், பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் தொப்கே மற்றும் கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் யீசாங் டே தபா ஆகியோருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) சிரேஷ்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
விஜயத்தின் போது திம்புவில் உள்ள தாஷிச்சோ சோங் விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அரச ஆடை அருங்காட்சியகம், செம்தோகா சோங் கோட்டை மற்றும் பாரோவில் அமைந்துள்ள பூட்டான் தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர், ‘ரொயல் பூட்டான் எயர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான KB 200 விமானம் மூலம் இன்று நாட்டை வந்தடைந்தார்.
இந்த விஜயம் மூலம் கல்வி, கலாசாரம், சுற்றுச்சூழல், நிலையான அபிவிருத்தி மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை – பூட்டான் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.









