தணமல்வில – அம்பேகமுவ வீதியின் அரம்பேகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 43 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தணமல்வில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காமினிபுர – தணமல்வில பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடவத்தை நகரின் வெளிவட்ட வீதியில், உடற்பயிற்சி பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் 58 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கடவத்தை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கடவத்தை – கோனஹேன பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மொனராகலை – பதுளை வீதியின் தொலொபோவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









