ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோகோ (Togo) சமர்ப்பித்த இந்தப் பிரேரணைக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதுடன், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக அமெரிக்கா மாத்திரமே வாக்களித்ததாகவும், மேலும் ஆறு நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1569ஆம் ஆண்டு ஃபிளெமிஷ் வரைபடக் கலைஞர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் (Gerardus Mercator) உருவாக்கிய பாரம்பரிய ‘மெர்கேட்டர் வரைபடம்’ (Mercator Map) பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும், இந்த வரைபடத்தில் ஆப்பிரிக்காவின் உண்மையான நிலப்பரவு சிதைத்துக் காட்டப்படுவதாக நீண்டகாலமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
உதாரணமாக, மெர்கேட்டர் வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஏறத்தாழ ஒரே அளவில் தோன்றினாலும், உண்மையில் ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட சுமார் 14 மடங்கு பெரியதாகும்.
கோள வடிவிலான பூமியின் மேற்பரப்பை இரு பரிமாண வரைபடமாக மாற்றும்போது ஏற்படும் புவியியல் சிதைவே இதற்குக் காரணம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சிக்கலைக் குறைக்கும் நோக்கில், 2018ஆம் ஆண்டு வரைபடவியல் நிபுணர்கள் குழுவினால் ‘Equal Earth’ எனப்படும் புதிய வரைபட வீழ்ப்பு உருவாக்கப்பட்டது.
இந்த வரைபடம் ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான அளவைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஒன்றாக இணைத்தாலும், ஆப்பிரிக்கக் கண்டம் அவற்றுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளதாக புள்ளிவிவரத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படாததாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தும் உலக வரைபடங்களில் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாக அமையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
நியாயமான உலகப் பார்வையை உருவாக்குவதற்கு துல்லியமான வரைபடங்கள் அவசியம் எனவும், வரைபடங்கள் வெறுமனே புவியியல் கருவிகள் அல்ல; அவை உலகின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிம்பத்தை வடிவமைக்கும் கருவிகளாகவும் செயற்படுகின்றன எனவும் ஆப்பிரிக்கத் தலைவர்களும் புவியியலாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.








