ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் குறைக்கும் வகையில் அமெரிக்கா தனது பொருளாதார அழுத்தத்தை தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஹ்ர்க் தீவு (Kharg Island) ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக விளங்கும் நிலையில், மேலும் இரண்டு எண்ணெய்க் கப்பல்களும் ஈரானுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதி முழுவதும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதுடன், எண்ணெய்க் கப்பல்களும் முக்கியமான மூலோபாய இலக்குகளாகக் கருதப்படுகின்றன.
அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலக்கு வைக்கப்பட்ட கப்பல்கள் ‘நிழல் கப்பற்படை’ (Shadow Fleet) எனப்படும் கப்பல் வலையமைப்பைச் சேர்ந்தவையாகும்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டின்படி, ஈரான் சர்வதேச தடைகளைத் தவிர்ப்பதற்காகவும், அமெரிக்காவின் கடற்படை நடவடிக்கைகளை மீறுவதற்காகவும் தனது கப்பல்களின் டிஜிட்டல் கண்காணிப்பு வலையமைப்பை முடக்கி, நிழல் கப்பற்படையின் ஊடாக ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெயை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படை (IRGC) அல்லது தெஹ்ரானிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.எனினும், ஈரானிய அதிகாரிகளிடமிருந்து விரைவில் இது தொடர்பான பதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.









