எல் நினோ (El Niño) வானிலை நிலைமையின் தாக்கத்தினால் நாட்டின் 7 மாவட்டங்களில் 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (05) வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 பேருக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலைமையால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 20,418 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,995 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,842 பேரில் 5,562 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,374 பேரில் 474 பேருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அநுராதபுர மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுடன், தொடர்ச்சியாக குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் ஒருங்கிணைந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.









