இலங்கை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திலிருந்து விலகவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் பணித்திறனை அதிகரிக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, ஆரம்ப வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் பல கட்டங்களாக சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகவும் சுமார் 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னர் சுமார் 17,000 ரூபாவாக இருந்த அரச சேவையின் குறைந்தபட்ச சம்பளம், அடுத்த ஆண்டாகும்போது 40,000 ரூபாவைத் தாண்டும் அளவுக்கு அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சம்பளம் தொடர்பான அழுத்தங்கள் இன்றி அரச ஊழியர்கள் தமது கடமைகளைச் செய்வது திறமையான அரச சேவைக்கு அவசியமானது என சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தாங்கக்கூடிய அதிகபட்ச அளவிலேயே இந்த சம்பளத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் டி.பி. சரத்,
“தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் முதலில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்ததாகும். முதலாவது வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 10,000 ரூபா அதிகரிக்கப்பட்டது. இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்திலும் அதே அளவு அதிகரிக்கப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள மூன்றாவது வரவுசெலவுத் திட்டத்திலும் அதே அளவில் சம்பளம் அதிகரிக்கப்படும்.
இதன் மூலம் முன்னர் சுமார் 17,000 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச அரச ஊழியர் சம்பளம், அடுத்த ஆண்டாகும்போது 40,000 ரூபாவைத் தாண்டும். இது வெறுமனே பேசுவதற்கான சம்பள உயர்வு அல்ல. அரச சேவையின் திறனை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சம்பளம் தொடர்பான அழுத்தங்களுக்கு மத்தியில் ஒருவர் பணியாற்றினால், அவரது கடமைகளைச் சரியாக நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, சம்பள உயர்வு அவசியமானது. இதைவிட அதிகமாக சம்பளத்தை உயர்த்த முடிந்தால் அது சிறந்ததாக இருக்கும். எனினும், நாட்டின் பொருளாதாரத்தால் தாங்கக்கூடிய அளவிலேயே தற்போதைய சம்பள உயர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக 2027ஆம் ஆண்டு நிறைவடைந்து, இலங்கை IMF திட்டத்திலிருந்து விலகிய பின்னர், அரச ஊழியர்களுக்கு இதைவிட அதிகளவிலான நிவாரணங்களை வழங்க முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது” என்றார்.








