தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், கணக்காய்வு செயன்முறையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல், திறமையான மனித வளத்தைத் தக்கவைத்தல் மற்றும் அரச நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ த சில்வா கலந்துகொள்ள முடியாத நிலையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கணக்காய்வு நடவடிக்கைகளின் தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை பரவலாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. தொழில்நுட்ப ரீதியாக கணக்காய்வு செயன்முறையை நவீனமயமாக்குவதன் மூலம் அரச நிதி முகாமைத்துவத்தை மேலும் விரிவாகக் கண்காணிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை, பயிற்சி பெற்ற திறமையான கணக்காய்வு அதிகாரிகள் வேறு துறைகளுக்குச் செல்வதால் ஏற்படும் மனித வளத் தக்கவைப்புப் பிரச்சினை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. திறமையான அதிகாரிகளை சேவையில் தக்கவைத்துக்கொள்ள பொருத்தமான கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், அரச நிறுவனங்களின் உள்நாட்டுக் கட்டுப்பாட்டு முறைமைகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றைத் திருத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமை எனவும் தெரிவிக்கப்பட்டது.
சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வின்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. அவற்றை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் கணக்காய்வு செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்களை பரிசீலிக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
கணக்காய்வு செயன்முறையை நவீனமயமாக்கும் போது தெளிவான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமொன்றைத் தயாரித்து, பணியாளர் தேவைகள் மற்றும் வளங்களை பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.
ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடலில், அதன் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல், சட்ட மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட ஆணைக்குழுவின் பொறுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஆணைக்குழுவை முழுமையான செயற்பாட்டு மட்டத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள், பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
சட்டத்திற்கு அமைவாக குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்ற வேண்டியுள்ள நிலையில், அவர்களுக்கான தற்போதைய கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என குழு சுட்டிக்காட்டியது. எனவே, முழுநேர உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.









