மாற்றுத் திறனாளிகளுக்கான பாராளுமன்ற குழுவின் 13ஆவது கூட்டம், குழுவின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
2026 ஜூலை முதல் 2027 ஜூன் வரையான காலப்பகுதிக்கான குழுவின் வரைவு செயல் திட்டம் தொடர்பில் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச தேர்தல் முறைமைகள் அறக்கட்டளையின் (IFES) தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள செயல் திட்டம், பாராளுமன்ற ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு, வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் பொறுப்புக்கூறல், சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள், அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய பொது சேவைகள் ஆகிய நான்கு முக்கிய துறைகளை உள்ளடக்கியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் மற்றும் கருத்துக்களை உள்ளூர் மட்டத்திலான அபிவிருத்தித் திட்டங்களில் இணைப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, களுத்துறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆலோசனை நிகழ்ச்சிகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதில் மாற்றுத் திறனாளிகள் சமூகத்தின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக மாவட்ட மட்ட அணுகல்தன்மை தணிக்கைக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஊடாக பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு–செலவுத் திட்டத்திற்காக மாற்றுத் திறனாளிகள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 அமைப்புகளின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட 234 கொள்கை மற்றும் நடைமுறை முன்மொழிவுகள் ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதையும், அவை மாற்றுத் திறனாளிகளுக்கு எதிர்பார்க்கப்படும் நன்மைகளை வழங்குகின்றனவா என்பதையும் கண்காணிக்க குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அணுகல்தன்மையை உறுதி செய்வதற்கும் புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
தற்போது தயாரிக்கப்பட்டு வரும் “மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமூலம்” மற்றும் “சைகை மொழி சட்டமூலம்” ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் சட்ட வரைவு திணைக்கள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை நிறுவனங்களுக்கான அணுகல்தன்மை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தி, அவற்றை படிப்படியாக சட்ட கட்டமைப்பில் இணைப்பது குறித்த முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
மேலும், தொழிலாளர் அமைச்சின் “மெஹெவர பியச” கட்டிடம் மற்றும் செத்சிறிபாய கட்டிடத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அணுகல்தன்மை தணிக்கைகளின் முடிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறைந்த தரை உயரம் கொண்ட பேருந்து சேவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகக்கூடிய சுற்றுலா மற்றும் “Friendly Cities” திட்டம் உள்ளிட்ட முயற்சிகளை மேலும் விரிவுபடுத்துவதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் அச்சம் அல்லது நிச்சயமற்ற தன்மையின்றி சுதந்திரமான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை நடத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே குழுவின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என அதன் தலைவர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவர்களின் குரல்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்கேற்பை உறுதி செய்வதில் பாராளுமன்றம் தொடர்ந்து செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.










