காஸா நகரில் மருத்துவ சேவைகளுக்கான வளங்கள் மற்றும் இடவசதிகள் கடுமையாகப் பற்றாக்குறையாகியுள்ள நிலையில், பல் மருத்துவர் ஒருவர் வீதியோரத்தில் அமைக்கப்பட்ட சிறிய கூடாரத்தில் தனது சேவையைத் தொடர்ந்து வருகிறார்.
மருத்துவர் ரிஸ்க் சுஃப்யான் அபோ ஹலீமா, காஸா பகுதியில் மருத்துவ நிலையங்களுக்கான இடங்களைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, ஒரு குறுகிய சந்துப் பகுதியில் கூடாரம் அமைத்து அதனை தற்காலிக பல் மருத்துவ நிலையமாகப் பயன்படுத்தி வருகிறார்.
காஸாவில் நிலவும் கடுமையான வெப்பநிலை தமக்கு பெரும் சவாலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“கடும் வெப்பநிலைதான் எனக்கு ஏற்பட்ட முதல் சவாலாக இருந்தது. கூடாரத்துக்குள் காற்றோட்டம் ஏற்படுவதற்காக அதன் ஓரங்களை மாற்றியமைத்து, முனைகளை உயர்த்த வேண்டியிருந்தது” என அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ரிஸ்க் சுஃப்யான் அபோ ஹலீமாவின் ‘Smile One’ எனும் முன்னைய பல் மருத்துவ நிலையம், வடக்கு காஸாவின் ஷேக் ஸயீத் நகரில் அமைந்திருந்தது.
2023ஆம் ஆண்டு போர் ஆரம்பமான காலப்பகுதியில் அந்த மருத்துவ நிலையம் குண்டுவீச்சுக்கு இலக்காகி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ நிலையத்தை இழந்த போதிலும், காஸா மக்களுக்கான பல் மருத்துவ சேவையை நிறுத்தாமல் தொடரும் நோக்கில், தற்போது சிறிய கூடாரத்தில் இருந்து தனது பணியை முன்னெடுத்து வருகிறார்.
குறைந்தளவிலான வளங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இடவசதிகளுக்கு மத்தியில், காஸாவில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் மற்றுமொரு வெளிப்பாடாக இந்த தற்காலிக பல் மருத்துவ நிலையம் அமைந்துள்ளது.
இது தொடர்பான விரிவான கட்டுரை பின்னர் வெளியாகும்.







