முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
விமல் வீரவன்ச அமைச்சராக பதவி வகித்த காலத்தில், தனது சட்டபூர்வமான வருமானத்திற்கு அப்பாற்பட்டு 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிபதி, வழக்கை செப்டெம்பர் 22ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக சாட்சிகளுக்கு அழைப்பாணை பிறப்பிக்கவும் உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டுகளின்படி, 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், விமல் வீரவன்ச இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும் வகையில் சட்டவிரோதமாக சொத்துக்களைச் சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னைய “நல்லாட்சி” அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









