2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று, தமிழ் மொழிமூலத்தில் தேசிய ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் சுரேந்தர் சபின் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம், மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுரேந்தர் சபின், தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை, சிங்கள மொழிமூலத்தில் அதிகூடிய புள்ளியாக 193 பதிவாகியுள்ளதுடன், இந்தப் புள்ளியை குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (02) மாலை வெளியிடப்பட்டன.
இம்முறை மாவட்ட மட்டத்திலான அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பெறுபேறுகளின்படி சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இப்பரீட்சைக்கு 294,132 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









