அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று (03) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உத்தேச சட்டமூலத்தில் உள்ள சில ஏற்பாடுகள் ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், குறித்த சட்டமூலம் மூலம் தகவல் அறியும் உரிமையும் மட்டுப்படுத்தப்படுவதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு மாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரமும் பெறப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.









