தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவுகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும், டெங்கு நோயின் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சில மாவட்டங்களில் ஆரம்பத்திலேயே டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதை அவதானிக்க முடிவதாகவும், அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பதிவாகுவதாகவும் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்புகளின் பெருக்கம் தொடர்பில் பொதுமக்கள் அலட்சியமாகச் செயற்பட்டால், அது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, தமது சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாகப் பேணுவதற்கு பொதுமக்கள் தொடர்ந்தும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








