நிலக்கரி மூலமான மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலக்கரி கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளை (04) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றைய நிலக்கரி கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், அந்தக் கப்பல்களில் இருந்து நிலக்கரியை இறக்கிய பின்னர் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் வழமைபோன்று மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனவும், பொதுமக்கள் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாட்டின் மின் உற்பத்தி தற்போது பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.








