காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுப்பதற்கான தொழில்நுட்பத் தீர்வை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பில், ரயில்வே திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மக்கள் வங்கியின் முழுமையான நிதியுதவியுடன் அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டுப் பங்களிப்பாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
3-Beam Detection, Passive Infrared (PIR) உணரிகள், தானியங்கி வெப்பநிலை உணரிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்தக் கட்டமைப்பு, 20 கிலோகிராமுக்கு மேற்பட்ட எடையுடைய விலங்குகள் ரயில் பாதைக்கு அருகில் இருப்பதை அடையாளம் கண்டு, சாரதிகளுக்கு அபாய எச்சரிக்கையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதையின் இருபுறங்களிலும் பொருத்தப்படும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற சமிக்ஞை விளக்குகள் ஊடாகவும், ரயில் இயந்திரத்திற்குள் நிறுவப்படும் விசேட திரை மூலமாகவும், யானை இருக்கும் துல்லியமான இடம் குறித்து சாரதிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கப்படும்.
பின்னவல யானைகள் சரணாலய வளாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில் இந்தக் கட்டமைப்பின் மாதிரிச் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சோதனை தொடர்பான அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் ரயில்களில் மோதும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறும் 13 இடங்களில் முன்னோடித் திட்டமாக இந்தத் தொழில்நுட்பக் கட்டமைப்பு எதிர்வரும் மாதம் முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும், திட்டத்தின் முன்னேற்றத்தை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட இணையத்தளமும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









