கேகாலை நகர சபை உறுப்பினர் ஒருவர், கபானா (Cabana) திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகக் கூறி ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான 34 வயதுடைய சந்தேகநபர், தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தி கேகாலை நகர சபையின் ஓலகம பிரிவில் உறுப்பினராக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் (CCIB), சந்தேகநபர் நேற்று காலை சுமார் 10.25 மணியளவில் கேகாலை – யட்டோகொட பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் நேற்று பிற்பகல் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதவான் நாலக வீரசிங்க, சந்தேகநபரை செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
கண்டியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை – தீவெல வீதியில் உள்ள மினுவன்கமுவ பகுதியில் காணி ஒன்றில் கபானா திட்டத்தை உருவாக்கப் போவதாகக் கூறி, குறித்த நகர சபை உறுப்பினர் தம்மிடம் இருந்து ரூ.26 மில்லியன் பெற்றதாக வர்த்தகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த திட்டம் ஒருபோதும் நிர்மாணிக்கப்படவில்லை என்றும், அதற்காக வழங்கப்பட்ட பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர் முதலில் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் ‘B அறிக்கை’ மூலம் கேகாலை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயத்தை அறிவித்திருந்தனர்.
பின்னர் இந்த வழக்கு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) மாற்றப்பட்டதுடன், அந்தப் பணியகமும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ‘B அறிக்கை’ ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் தகவல்களை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.









