ransparency International Sri Lanka (TISL), 2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட ஊழல் தடுப்பு (திருத்த) சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பின் 1, 3, 4, 12, 13, 14(1)(a), 14A, 126, 140 மற்றும் 156A(1)(c) ஆகிய உறுப்புரைகளுடன் முரண்படுவதாக TISL தெரிவித்துள்ளது.
இந்த திருத்தங்கள் மக்களின் இறையாண்மையை பாதிப்பதுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, நீதித்துறை அதிகாரத்திலும் தலையீடு செய்கின்றன என TISL சுட்டிக்காட்டியுள்ளது.
மனுவில் சவால் செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில்:
- 4ஆம் பிரிவு – குற்றத்தில் உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிரான வழக்குத் தொடரலைத் தவிர்ப்பது தொடர்பில் நீதவான் அனுமதியை நீக்கி, CIABOC பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.
- 6 மற்றும் 18ஆம் பிரிவுகள் – அரசின் பங்குதாரித்துவ வரம்பை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்துவதன் மூலம், அரசுடன் தொடர்புடைய பல நிறுவனங்களை சொத்து அறிவிப்பு கட்டாயத்திலிருந்து விலக்குகின்றன.
- 7ஆம் பிரிவு – ஒன்றாக வசிப்பவர்களின் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தை நீக்குகிறது. இதன் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட சொத்துக்களை மறைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம் என TISL எச்சரித்துள்ளது.
- 11ஆம் பிரிவு – CIABOC-க்கு சொத்து அறிவிப்புகளில் தகவல்களை மறைக்கும் பரந்த அதிகாரங்களை வழங்குவதுடன், மறைக்கப்பட்ட சொத்து அறிவிப்புகளை உத்தியோகபூர்வ சமர்ப்பிப்புக்கு வெளியே பயன்படுத்துவதையும் குற்றமாக்குகிறது. இதற்காக அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த மாற்றங்கள் குடிமக்கள் செயற்பாடு, ஊடகவியல் மற்றும் சுதந்திர ஊடகங்களின் செயற்பாட்டை கடுமையாக கட்டுப்படுத்தி, அரசியலமைப்பின் 14(1)(a) உறுப்புரையால் உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் என TISL தெரிவித்துள்ளது.
மேலும், பிணை வழங்கப்படுவது விதிவிலக்காகவும், விளக்கமறியல் வழக்கமான நடைமுறையாகவும் அமையும் வகையிலான பிரிவுகளுக்கும் TISL எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விதிகள் தெளிவற்றதாகவும், அளவுக்கு மீறியதாகவும் இருப்பதுடன், குற்றச்சாட்டுகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் விகிதாசாரக் கொள்கையை மீறுவதாகவும் TISL தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
சவால் செய்யப்பட்டுள்ள பிரிவுகள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே சட்டமாக்கப்பட முடியும் என தீர்மானிக்குமாறு TISL உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.












