பூட்டானில் நடைபெற்ற விழிப்புணர்வு உணவு முறைமைகள் தொடர்பான உலக உச்சிமாநாட்டில், நிலையான உணவு முறைமைகள் குறித்து இலங்கையின் பாரம்பரிய அறிவையும் அனுபவங்களையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உலகிற்கு எடுத்துரைத்தார்.
“நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக விழிப்புணர்வுடன் எழுச்சி பெறுதல்” (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) என்ற தொனிப்பொருளில், 2026 செப்டெம்பர் 01ஆம் திகதி பூட்டானின் டுங்கார் ட்சோங்கில் (Dungkar Dzong) நடைபெற்ற விழிப்புணர்வு உணவு முறைமைகள் தொடர்பான உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) பிரதமர் பிரதான உரையாற்றினார்.
நிலையான, நியாயமான மற்றும் மீளுருவாக்கம் கொண்ட உணவு முறைமைகளை முன்னெடுப்பதில் விழிப்புணர்வு, சமூக விழுமியங்கள், கலாசாரம் மற்றும் ஆன்மீக மாற்றத்தின் பங்களிப்பை மையமாகக் கொண்டு இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
பூட்டான் அரசாங்கம், விழிப்புணர்வு உணவு முறைமைகள் கூட்டணி (Conscious Food Systems Alliance – CoFSA) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியவை இணைந்து, “உணவு முறைமைகளின் மாற்றத்தின் இதயத்தை இயங்கச் செய்தல்” (Activating the Heart of Food Systems Transformation) என்ற பரந்த தொனிப்பொருளில் இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர், உணவு உற்பத்தி முதல் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் நுகர்வு வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையுடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை இலங்கையர்கள் தலைமுறை தலைமுறையாகப் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், இந்த பாரம்பரிய அறிவையும் நடைமுறைகளையும் முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையராகப் பெருமிதம் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதான உரையைத் தொடர்ந்து, பூட்டான் பிரதமர் தாஷோ செரிங் தோப்கே (Dasho Tshering Tobgay) உடன் “விழிப்புணர்வுத் தலைமை – மேலும் நீதியான மற்றும் புத்துயிர் பெறும் உலகிற்கான மாற்றத்தை எளிதாக்கும் கலை” (Conscious Leadership – The Art of Facilitating Transformation for a More Just and Regenerative World) என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.
இலங்கையின் பாரம்பரிய உணவு முறைமைகள் நிலைத்தன்மை மற்றும் சமநிலை குறித்த ஆழமான புரிதலின் அடிப்படையில் அமைந்திருந்ததாகவும், பாரம்பரிய விவசாய முறைகள் இயற்கைக்கு எதிராக அல்லாமல், இயற்கையுடன் இணைந்து செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
குழு கலந்துரையாடலைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் பிரதமர் பங்கேற்றார். இதன்போது உணவுப் பாதுகாப்பு, சிறந்த விவசாய நடைமுறைகள், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் நிலையான சமூக, பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
நிலையான உணவு முறைமைகள், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை சமாளிப்பதில் விழிப்புணர்வுமிக்க தலைமைத்துவத்தின் பங்களிப்பு தொடர்பில் இலங்கையின் கருத்துகளையும் அனுபவங்களையும் சர்வதேச சமூகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கான முக்கிய தளமாக இந்த உலக உச்சிமாநாடு அமைந்தது.
பிரதமர் ஊடகப் பிரிவு












