இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவுக்கான ஏற்றுமதி 7.22% அதிகரித்து 669.36 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் இந்தியாவுக்கான ஏற்றுமதி 624.31 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் அது அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கான ஏற்றுமதி 9.12% வருடாந்த அதிகரிப்புடன் 129.51 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 2025 ஜூலை மாதத்தில் இது 118.69 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
கொதிகலன்கள், பிஸ்டன் இயந்திரங்கள், பம்புகள் மற்றும் வெற்றிடப் பம்புகள், பெட்ரோலிய எண்ணெய்கள், கால்நடைத் தீவனம் மற்றும் அடிப்படை உலோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்தமையே இந்தியாவுக்கான ஏற்றுமதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக EDB தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெற்காசிய பிராந்தியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது.
2026 ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் தெற்காசிய சந்தைகளுக்கான இலங்கையின் ஏற்றுமதி 11.98% வருடாந்த அதிகரிப்புடன் 916.55 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.









