அனைத்துப் பாராளுமன்ற சபாநாயகர்களின் இரண்டாவது மாநாடு கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரில் கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்றது.
நோம் பென்னிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில், இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.
கம்போடிய செனட் சபை மற்றும் தேசிய பேரவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஓசியானியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பாராளுமன்ற சபாநாயகர்கள், சட்டவாக்கத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
“சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பிற்கான ஒருமைப்பாடு: சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல்” என்ற தொனிப்பொருளில் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் பிரதான உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் பாராளுமன்றங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனவும், அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் சந்தர்ப்பங்களிலும் உரையாடல் மற்றும் தொடர்பாடலுக்கான வாயில்களைத் திறந்து வைத்திருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
உண்மையானதும் நிலையானதுமான சமாதானம் என்பது போர் இல்லாத நிலையை மாத்திரம் குறிக்காது எனக் குறிப்பிட்ட அவர், பரஸ்பர மரியாதை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியின் அடிப்படையிலேயே நிலையான சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
காலநிலை மாற்றம், இணையக் குற்றங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் சவால்களை தனிநாடுகளால் தனித்து எதிர்கொள்ள முடியாது எனவும், அவற்றை சமாளிக்க பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் எனவும் சபாநாயகர் வலியுறுத்தினார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை அவர் உறுதியளித்தார்.
மாநாட்டில் கலந்துகொண்டிருந்த காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் அவுஸ்திரேலியப் பாராளுமன்ற சபாநாயகர் மில்டன் டிக் மற்றும் நேபாள தேசிய பேரவையின் தலைவர் நாராயண் பிரசாத் தஹால் ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இதனிடையே, கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹாமோனி, கம்போடிய செனட் சபையின் தலைவர் ஹுன் சென் மற்றும் கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் ஆகியோருடனும் இலங்கைப் பிரதிநிதிகள் சந்திப்புகளை மேற்கொண்டனர்.மாநாட்டின் நிறைவில், சர்வதேச முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டவாக்கக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் “நோம் பென் பிரகடனம்” உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.












