எல் நினோ நிலைமைகளால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வெள்ளம், மண்சரிவு போன்ற இரட்டை பேரிடர்களை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், அதிக ஆபத்து குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான அவசரத் திட்டம் இல்லாதது “முற்றிலும் அலட்சியமான செயல்” என அவர் தெரிவித்துள்ளார்.
“எல் நினோ காரணமாக ஒன்றல்ல, இரண்டு பேரிடர்களை இலங்கை எதிர்கொள்ளும் அதிக வாய்ப்புள்ளது” என அவர் எச்சரித்துள்ளார்.
ஆசியா–பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மதிப்பீட்டில், இலங்கை “அதிக கவலைக்குரிய நாடுகளில்” ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வலுவடைந்து வரும் எல் நினோ நிலைமைகளுடன், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் எதிர்வரும் மகா பயிர்ச்செய்கை காலத்தில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் அறிக்கை எச்சரித்துள்ளது.
FAO, WFP, UN Women, WMO மற்றும் ஐ.நா. மனிதாபிமான அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின்படி, ஒக்டோபர் மாதம் முதல் இரண்டாம் இடைப்பருவ மழைக்காலம் ஆரம்பிக்கும்போது சராசரியை விட அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும்.
கூடுதல் மழை நீர்த்தேக்கங்களை நிரப்புவதற்கு உதவக்கூடும் என்றாலும், மகா பயிர்ச்செய்கைக்கான விதைப்பு காலத்தில் அதிக மழை பெய்தால் வெள்ளம், நீர் தேக்கம் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.









