கரையோர ரயில் பாதையை புனரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்கொனாவில் புதிய இரட்டை ரயில் பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் திங்கட்கிழமை (31) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கரையோர ரயில் பாதையின் 33ஆவது மைல் கல், 43ஆவது சங்கிலித் தொடர் பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்தப் புதிய பாலம், அரச நிதியில் 401.03 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் கீழ் R.R. Construction நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், ஒரு வருடத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இரும்புப் பாலத்திற்கு இணையாக புதிய கான்கிரீட் பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இது 26 மீற்றர் நீளமும் 10.5 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையும்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது தற்போதுள்ள இரும்புப் பாலம் சேதமடைந்ததுடன், முறையான புனரமைப்பு மேற்கொள்ளப்படாததால் தொடர்ந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
இதன் காரணமாக, இந்தப் பகுதியில் ரயில்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதுடன், குறித்த ரயில் பாதையில் ரயில் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ரயில்வே திணைக்களத்தின் வழித்தடங்கள் மற்றும் பணிகள் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.









