ஐக்கிய நாடுகளின் கட்டாய அல்லது தன்னிச்சையற்ற காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான செயற்குழுவின் (WGEID) பிரதிநிதி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுடன் இணைந்து, அவர்களின் காணாமல் போன உறவுகளின் தனிப்பட்ட பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளார்.
WGEID பிரதிநிதி அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் (ARED) தலைவர் யோகராசா கனகரஞ்சினி ஆகியோர், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) “நீதிக்கான நீண்ட பாதை” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்தனர்.
17 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன தமது உறவினர்களைத் தேடி வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கண்காட்சியில் கலந்துகொண்டனர். காணாமல் போன தமது உறவினர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்ட சிலர் உணர்ச்சிவசப்பட்டனர்.
“தனது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளை எங்கே இருக்கிறார் என்பதை அறியாமல் எந்தவொரு தாயும் உயிரிழக்கக் கூடாது” என டெல்கடில்லோ பெரெஸ் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் இருப்பிடம் தொடர்பான தகவல்கள் தெரியாதவரை, அவர்களின் குடும்பங்கள் பதில்களைத் தேடும் போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“பாதிக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் இருப்பிடம் தெரியாதவரையும், அவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து பதில்களைத் தேடும் வரையும், குற்றமும் தொடர்கிறது. அதேபோல், நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசினதும் சர்வதேச சமூகத்தினதும் பொறுப்புகளும் தொடர்கின்றன” என அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழிகள் மற்றும் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு WGEID பிரதிநிதி விஜயம் செய்யவுள்ளார்.
அவரது கண்டறிதல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பான WGEID-யின் வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.













