காலி தேசிய வைத்தியசாலைக்கு 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை இந்தியா வழங்கியது!
இந்திய மக்களின் பங்களிப்பாக, காலி தேசிய வைத்தியசாலைக்கு இந்தியா 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னி மற்றும் ஹம்பாந்தோட்டை இந்திய துணைத் தூதரகத்தின் தூதுவர் ஹர்விந்தர் சிங் ஆகியோரால், காலி தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகமும் ஆலோசனை வைத்தியருமான டொக்டர் பிரியந்த அட்டபத்துவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
வைத்தியசாலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட பல்வேறு இடங்களில் இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இதன் முதலாவது இயந்திரம் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நிறுவப்பட்டதுடன், நிகழ்வின்போது அது உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. மேலும், இந்திய தூதுக்குழுவினர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை வசதிகளான அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) மற்றும் அவசர சிகிச்சை நிலையம் (ETC) ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.