இலங்கையின் அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) முன்வைத்துள்ள நிலைப்பாட்டுக்கு இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் BASL முன்னெடுக்கும் எந்தவொரு சட்டபூர்வமான மற்றும் அரசியலமைப்புக்கு இணங்கிய நடவடிக்கைகளுக்கும் தமது முழுமையான ஆதரவு தொடரும் என சங்கம் தெரிவித்துள்ளது.
BASL தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், நீதித்துறையின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, அதிகாரப் பிரிப்பு மற்றும் மக்களின் இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பது ஒரு குறிப்பிட்ட தொழில்சார் குழுவின் பொறுப்பு மாத்திரமல்ல என்றும், ஒட்டுமொத்த சிவில் சமூகத்தின் பொறுப்பு என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் அல்லது ஓய்வு பெறும் வயதில் மாற்றங்களை வழக்கமான நிர்வாகத் திருத்தங்களாகக் கருத முடியாது எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் முறை மற்றும் காலநேரம், நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
நீதித்துறை அமைப்பில் காணப்படும் தாமதங்கள் அல்லது செயற்றிறன் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள், நீதித்துறையின் நிறுவன ரீதியான சுதந்திரத்திற்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் சட்டத்தரணிகள் சமூகத்துக்கு மாத்திரம் மட்டுப்பட்டதல்ல என்றும், அனைத்து குடிமக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான நீதித்துறையையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்துவதற்கான BASL-இன் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் சங்கம் உறுதியளித்துள்ளது.









