கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜை ஒருவரை தாக்கி, கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சீனப் பிரஜைகள் சிகிரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த இருவரும் நேற்று (ஆகஸ்ட் 28) சிகிரியாவில் உள்ள உணவகம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜைகள் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது மூவர் தாக்கப்பட்டதுடன், ஒருவர் கடத்தப்பட்டார். பின்னர் கடத்தப்பட்ட நபரின் சடலம் எஹெலியகொட பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த மூன்று சீனப் பிரஜைகள் தொடர்பில் முன்னதாக பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரியிருந்தனர்.
சிகிரியாவில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (ஆகஸ்ட் 29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.









