இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல மகா பெரஹெராவை அரசியல் சர்ச்சைகளுக்குள் கொண்டு வரக்கூடாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத மற்றும் கலாசார பாரம்பரியத்தை அரசியல் சர்ச்சைகளிலிருந்து பாதுகாப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வருடாந்தம் நடைபெறும் ஸ்ரீ தலதா மாளிகையின் எசல மகா பெரஹெரா மற்றும் சதர மகா தேவாலயங்களின் பெரஹெரா வெற்றிகரமாக நிறைவடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ‘சன்னஸ்’ பத்திரத்தை ஆகஸ்ட் 28ஆம் திகதி கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பெற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
புனித தந்தத்தைச் சார்ந்த வரலாற்று பாரம்பரியத்தை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதோ அல்லது அரசியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்துவதோ “முற்றிலும் பொருத்தமற்றது” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இனிமேல் எந்தவொரு அரசியல் மேடையிலும் பெரஹெராவை நிறுத்துவது தொடர்பில் விவாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள், புனித தந்தம் மற்றும் நாட்டின் கலாசார பாரம்பரியம் ஆகியவற்றுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் தொடர்பையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வருடாந்த பெரஹெராவை சிறப்பாக நடத்துவதற்கு வழிகாட்டிய மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
தியவடன நிலமே, சதர மகா தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள், அரச அதிகாரிகள், கலைஞர்கள் மற்றும் பெரஹெராவுடன் தொடர்புடைய ஏனைய அனைவரின் பங்களிப்புகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
கலாசார பாரம்பரியம் மற்றும் தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, செல்வமும் அதிகாரமும் சமூக அந்தஸ்தின் அளவுகோல்களாக மாறிவரும் நிலையில், சமூக விழுமியங்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மனித உறவுகள், கலாசார பாரம்பரியம், வரலாற்றுடனான தொடர்பு மற்றும் மனிதாபிமானம் ஆகியவையே சமூகத்தை வழிநடத்தும் முக்கிய விழுமியங்களாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தலதா பெரஹெராவை முன்னிலைப்படுத்தி இலங்கையில் நடைபெறும் பெரஹெரா பாரம்பரியங்கள், மேலும் நாகரிகமான சமூகத்தை உருவாக்குவதில் பங்களிக்கக்கூடியவை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய கலைஞர் சமூகங்களைப் பாதுகாப்பதுடன், அரச ஆதரவுடன் கலாசார மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய கலாசார மறுமலர்ச்சி யுகத்தில் பொதுமக்கள் பங்கேற்குமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.








