அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக கால்நடைகளுக்கான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை, ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவசரமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தெரிவிக்கையில், முன்னதாக ஒரு பசுவிடமிருந்து நாளொன்றுக்கு சுமார் 7 முதல் 8 லீற்றர் வரை பால் கிடைத்த நிலையில், தற்போது கால்நடை தீவனத்துக்கான தட்டுப்பாடு காரணமாக அது 1 முதல் 2 லீற்றராகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நாட்டின் பல முக்கிய மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் கணிசமாகக் குறைந்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள கிரித்தலை நீர்த்தேக்கம், அம்பாறையில் உள்ள சேனாநாயக்க சமுத்திரம் மற்றும் அனுராதபுரத்தின் நொச்சியாகம, குடா ஓயா மடுவ ஆகிய பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் வறட்சி வனவிலங்குகளையும் பாதித்துள்ளது. சில பகுதிகளில் மீன்கள் உயிரிழந்துள்ளதுடன், சோமாவதிய தேசிய பூங்காவில் உள்ள காட்டு யானைக் கூட்டங்கள் குடிநீரைத் தேடி ஜனரஞ்சன வெவ நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) தகவலின்படி, ஏழு மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலகப் பிரிவுகளில் 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, ஆறு மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் விநியோகம் அதிகளவில் இடம்பெறும் மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது. அங்கு 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 35,639 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மட்டக்களப்பில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,253 பேருக்கும், அம்பாறையில் 2,823 குடும்பங்களைச் சேர்ந்த 8,847 பேருக்கும், பொலன்னறுவையில் 683 குடும்பங்களைச் சேர்ந்த 2,646 பேருக்கும், இரத்தினபுரியில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் நிலவும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில், வறட்சியிலிருந்து நிவாரணம் வேண்டி பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் நாடளாவிய ரீதியில் ‘மழை வேண்டி பிரித்’ (வெஹி பிரித்) ஓதும் நிகழ்ச்சிகளை மாவ்பிம சுரகீமே சன்விதானய ஆரம்பித்துள்ளது.









