நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு இலங்கை அரசு பதிலளித்துள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விரிவான நீதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும் என்றும், குறிப்பிட்ட நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பிய ஆறு பக்க பதிலில், வழக்குகள் தேங்குவதையும் தாமதங்களையும் குறைத்தல், நீதிக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் அனுபவமிக்க நீதிபதிகளின் நிபுணத்துவத்தையும் நிறுவன ரீதியான அறிவையும் தக்கவைத்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்த்வெய்த், ஆகஸ்ட் 7ஆம் திகதி அனுப்பிய தகவலில், இந்த மாற்றங்கள் தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கும் பொருந்துமாயின், நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரப் பிரிப்பு மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடர்பில் கேள்விகள் எழக்கூடும் என தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் தெரிவித்துள்ளதன்படி, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் போது அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அந்த நேரத்தில் ஓய்வு பெற வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கவும் இந்தத் திருத்தம் முன்மொழிகிறது.
இதனிடையே, நீதித்துறை (திருத்த) சட்டமூலத்தின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 61 இலிருந்து 63 ஆகவும், ஏனைய நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் கட்டாய ஓய்வு வயதை 62 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.அத்துடன், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.இரு சட்டமூலங்களும் ஆகஸ்ட் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த மாற்றங்கள் நீதித்துறையின் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு சாதகமாக அமையக்கூடும் என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அரசு, “உயர் நீதிமன்றங்களின் குறிப்பிட்ட உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காகவோ அல்லது உடனடி நிறுவன நோக்கங்களுக்காக நீதித்துறையின் அமைப்பை மாற்றுவதற்காகவோ இந்த சட்டமூலங்கள் முன்மொழியப்படவில்லை” என தெரிவித்துள்ளது.
தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கும் முன்மொழியப்பட்ட புதிய ஓய்வு வயது விதிகளைப் பயன்படுத்துவதற்கான அரசின் முடிவையும் அது நியாயப்படுத்தியுள்ளது.
அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்வதுடன், நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை பதவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் நிலையில் அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், எந்த நீதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பது என்பதை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்க இந்த சட்டமூலங்கள் அதிகாரம் வழங்கவில்லை என்றும், நீதிபதிகளின் தீர்ப்புகளின் அடிப்படையில் அவர்களைப் பதவியில் இருந்து நீக்கவோ, நீதித்துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிடவோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளில் தலையிடவோ அவை அனுமதிக்கவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
முறையான சட்ட நடைமுறையின் மூலம் கட்டாய ஓய்வு வயதை மாற்றுவது, சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் கடமைகளுக்கும், நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான சர்வதேச கொள்கைகளுக்கும் முரணானதல்ல என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
ஓய்வு வயதில் ஏற்படும் மாற்றம் தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் எதிர்பார்க்கப்படும் பதவிக்காலத்தை பாதிக்கக்கூடும் என்பதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அது தானாகவே அரசியல் தலையீடாக அமையாது என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்மொழியப்பட்ட சட்டமூலங்களின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மைக்கு எதிராக பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பை முன்கூட்டியே மதிப்பிடவோ அல்லது அதில் தலையிடவோ அரசாங்கம் முயற்சிக்காது என்றும், உயர் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் “முழுமையாக மதிக்கும்” என்றும் ஐ.நாவிடம் தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, அதன் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மைக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும் சவால் விடுத்துள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள இலங்கை அரசு, ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மற்றும் ஏனைய ஐ.நா. மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.















