அமெரிக்காவின் கடற்படை முற்றுகை காரணமாக நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஈரானில் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என ஈரான் வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர் காசெம் நவுதே ஃபரஹானி தெரிவித்துள்ளார்.
“எங்களிடம் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. ஆனால், விலைகள் அதிகரித்துள்ளன. விலையேற்றத்தின் ஒரு பகுதி தளவாடச் சிக்கல்களாலும், போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்பட்ட மாற்றங்களாலும் ஏற்பட்டுள்ளது. முந்தைய வழித்தடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது ரயில் மற்றும் வீதி மார்க்கமாக பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக நேரமும் செலவும் ஏற்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அரச செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ள செய்தியில் அவரது கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பல தசாப்தங்களாக கடுமையான பொருளாதாரத் தடைகளால் ஏற்கனவே நெருக்கடியான நிலையில் இருந்த ஈரானின் பொருளாதாரத்தின் மீது தற்போதைய போர் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா திங்கட்கிழமை அறிவித்த புதிய பொருளாதாரத் தடைகளையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான ஈரானிய ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.









