காஸா பகுதிகளில் குழந்தைகள் பட்டம் பறக்கவிடுவதை காரணம் காட்டி பாலஸ்தீனர்களை அங்கிருந்து வெளியேற்றப் போவதாக இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக கண்டித்துள்ளது.
“குழந்தைகள் பட்டம் பறக்கவிட்டதற்காக மக்களை வெளியேற்றுவதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல் முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது” என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் ரவினா ஷம்தசானி தெரிவித்துள்ளார்.
பட்டங்கள், ட்ரோன்கள் அல்லது பலூன்கள் இஸ்ரேல் நோக்கி தொடர்ந்து செலுத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
அத்துடன், அவை ஏவப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு காஸாவின் மக்கள் குழுக்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
காஸாவில் அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தம் தொடர்ந்தும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து 1,280க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.









