வொஷிங்டனுக்கும் ஒட்டாவாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக கனடா பதிலடி வரிகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான அமெரிக்கப் பொருட்கள் பாதிக்கப்படவுள்ளன.
செவ்வாய்க்கிழமை (25) கனேடிய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில், 27.6 பில்லியன் கனேடிய டொலர்கள் (19.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிதாக விதித்த வரிகளுக்கு இணையாக, “டொலருக்கு டொலர்” என்ற அடிப்படையில் இந்த பதிலடி வரிகள் விதிக்கப்படுகின்றன.
மேலும், வர்த்தகப் போரால் பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய திட்டத்தையும் கனடா அறிவித்துள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்தப் பதிலடி வரிகள் 700-க்கும் மேற்பட்ட பொருட்களை பாதிக்கும். எஃகு மற்றும் அலுமினியம், பால் உற்பத்திப் பொருட்கள், மின்சாதனங்கள், விவசாய உபகரணங்கள், கூழ் மற்றும் காகிதம், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் துறைகள் உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன.
இந்த வரிகள் 15 முதல் 50 சதவீதம் வரை இருக்கும் என்றும், செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகப் போரால் ஏற்படும் நிதி அபாயங்களை சமாளிக்க சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 7.5 பில்லியன் கனேடிய டொலர்கள் (5.42 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான நிதித் தொகுப்பையும் கனடா அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் பின்னடைவு
கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து கனடாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மேலதிக வரியையும் ட்ரம்ப் அறிவித்தார். இதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் தற்போதைய வரி இரட்டிப்பாகி 50 சதவீதமாக அதிகரிக்கவுள்ளது.
இதற்கிடையில், கனடாவை இணைத்து அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக்குவது தொடர்பான தனது நீண்டகால கருத்துக்களையும் ட்ரம்ப் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னியை “Governor Carney” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்டாரியோ ஏரியின் பெயரை “Lake America” என மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்கா ஆண்டுதோறும் கனடாவிடம் 60 பில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக ட்ரம்ப் Truth Social தளத்தில் தெரிவித்தார்.
எனினும், கனடாவின் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தகவல்படி, அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக உபரி 9.9 பில்லியன் கனேடிய டொலர்கள் (7.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஆகும்.
அமெரிக்க நுகர்வோரும் பாதிப்பு
அமெரிக்காவின் வர்த்தக வரிகளின் தாக்கம் அந்நாட்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் மீது ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை விதிக்கப்பட்ட வரிகளில் கார்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் துறை அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முக்கிய சர்ச்சையாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கார்களை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடாக கனடா இருப்பதால், அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படக்கூடும்.
அதேவேளை, ட்ரம்பின் 50 சதவீத வரி காரணமாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 550 வகையான நுகர்வுப் பொருட்களின் விலைகள் அமெரிக்காவில் அதிகரிக்கக்கூடும். இதில் ஐஸ் ஸ்கேட்கள், கழிப்பறைத் தாள்கள், சில மதுபானங்கள் மற்றும் வர்ணப்பூச்சுகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
கீல் உலகப் பொருளாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, அமெரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோர் இணைந்து 96 சதவீத வரிச்சுமையை ஏற்க நேரிடும்.
சந்தைகளில் தாக்கம்
பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் போது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை, செவ்வாய்க்கிழமை ஆரம்பத்தில் சுமார் 1 சதவீதம் வீழ்ச்சியடைந்த பின்னர் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,696 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
அமெரிக்க டொலர் 0.04 சதவீதம் குறைந்து 98.96 ஆகவும், கனேடிய டொலர் குறியீடு 0.04 சதவீதம் அதிகரித்து 72.27 ஆகவும் பதிவாகியுள்ளது.
வோல் ஸ்ட்ரீட்டில் Nasdaq 0.5 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், Dow Jones Industrial Average பெரும்பாலும் மாற்றமின்றியும், S&P 500 0.2 சதவீதம் உயர்ந்தும் காணப்பட்டது.டொராண்டோவில் S&P/TSX Composite Index 0.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
(அல் ஜசீரா)









