புதுப்பிக்கப்பட்ட கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் வெற்றிலை எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட 1,000க்கும் மேற்பட்டோர், தாங்கள் அசுத்தப்படுத்திய பகுதிகளையே சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சில பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செயற்படும் CCTV கண்காணிப்பு அமைப்பின் மூலம் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்படுகின்றனர். இந்தக் கண்காணிப்பு அமைப்பு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், துன்புறுத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்குவாட்ரன் லீடர் இந்திக விக்ரமசிங்க தலைமையில் 25 விமானப்படை வீரர்கள் கொண்ட குழுவொன்று இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
இதற்காக 64 CCTV கெமராக்கள் பயன்படுத்தப்படுவதுடன், நாளொன்றுக்கு 88 கண்காணிப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் CCTV கண்காணிப்பு வலையமைப்பின் மூலம் பேருந்து நிலையத்தில் 1,286 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
CCTV காட்சிகளின் அடிப்படையில் திருட்டு, சொத்து சேதப்படுத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 64 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.








