டிட்வா சூறாவளியால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கான திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள இந்தப் பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்திற்கு சீன மக்கள் குடியரசு நிதியுதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதல் கட்டம் 18 மாதங்களில் 9 பாலங்களை புனரமைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக சீனாவினால் 7,929 மில்லியன் ரென்மின்பி நிதி வழங்கப்படவுள்ளது.
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், இத்திட்டம் உத்தியோகபூர்வ அரசாங்கத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.









