2004 முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை அஞ்சல் துறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் ஒழுக்காற்று விதிமீறல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொது கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (COPA) வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தலைமையில் கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கோபா குழுக் கூட்டத்தின்போதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் 7ஆம் திகதி கோபாவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியுள்ள விதம் மற்றும் அஞ்சல் துறையின் தற்போதைய செயல்திறன் தொடர்பிலும் இதன்போது ஆய்வு செய்யப்பட்டது.
விசாரணை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய கணினிமயப்படுத்தப்பட்ட மென்பொருள் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விசாரணைக் கோப்புகளின் தகவல்களைப் புதுப்பிப்பதுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தையும் கண்காணிக்க முடியும்.
பெருமளவிலான நிதி மோசடிகள் மற்றும் பாரதூரமான ஒழுக்காற்று விதிமீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என கோபா வலியுறுத்தியுள்ளது.
சில விசாரணைகள் பல ஆண்டுகளாக நிறைவடையாமல் உள்ளமை, குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சிலர் உயிரிழந்துள்ளமை அல்லது காணாமல் போயுள்ளமை, சில வழக்குகளில் சட்ட நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளமை மற்றும் விசாரணைப் பிரிவில் மனிதவளப் பற்றாக்குறை நிலவுகின்றமை குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யுமாறும் கோபா அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் ஏற்பட்டுள்ள நிதி இழப்புகளை பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அஞ்சல் துறையின் நிதி முகாமைத்துவம் மற்றும் உள்கட்டுப்பாட்டு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கோபா வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, அஞ்சல் துறையில் மேலதிக நேர கொடுப்பனவுகளை (Overtime) முறையாக நிர்வகிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஒன்பது மாகாணங்கள் மற்றும் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தை உள்ளடக்கிய முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணியாய்வின் அடிப்படையில், தேவையான பணியாளர் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் ‘Optimum Cadre’ முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கும்போது ஊழியர்களின் வருகையை துல்லியமாக உறுதிப்படுத்த கைரேகைப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் சேவைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்துதல் தொடர்பிலும் கோபா கவனம் செலுத்தியுள்ளது.
Speed Post, Cash on Delivery மற்றும் சர்வதேச கூரியர் சேவைகள் உள்ளிட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை விரிவுபடுத்துதல், அஞ்சல் வங்கிச் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அஞ்சல் துறையின் வருமானத்தை அதிகரித்தல் தொடர்பான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், தொலைதூர மற்றும் அணுகுவதற்கு சிரமமான பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் உப அஞ்சல் அலுவலகங்களை, வலையமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் மூடுவதற்குப் பதிலாக தொடர்ந்து பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கோபா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










