(எம்.எஸ்.எம். ஸாகிர்)
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மறைந்த கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கி கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில், மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP), சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான றஸ்மி எம். மூஸா மற்றும் ஏ.எல்.எம். தௌபீக், கவிஞர் கே.எம்.ஏ. அஸீஸ், ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம்.எம். இஸ்மாயில், ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.எம். ஜப்பார், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ரியாத் ஏ. மஜீத், அரசியல் விமர்சகரும் சமூக செயற்பாட்டாளருமான பாடகர் முனைமருதவன் எம்.எச்.எம். இப்றாஹீம், கலாபூஷணம் முபாரக் அப்துல் மஜீத், ஸ்ரீலங்கா பென் கிளப்பின் தலைவி மசூரா ஸுஹுர்தீன், அதன் செயலாளர் டாக்டர் பர்வீன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
அத்துடன், மருதம் கலைக்கூடல் மன்றத்தின் பிரதித் தலைவர் என்.எம். அலிக்கான், செயலாளர் ஹாஜியானி சித்தி ஜெஸீனா உள்ளிட்ட மன்றத்தின் உயர்பீட உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
மருதூர் கலை, கலாசார மன்றத்தின் தலைவர் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் மற்றும் களிகம்பு பயிற்றுவிப்பாளர் ‘கலைச்சுடர்’ எம்.எஸ்.எம். ஸாகிர் தலைமையிலான பொல்லடிக் குழுவினர், பாரம்பரிய பொல்லடி நிகழ்வுடன் அதிதிகளை வரவேற்று சிறப்பித்தனர்.
நிகழ்வில் மருதக் கலைஞர்களின் கவிதைகள், பாடல்கள் மற்றும் பொல்லடி உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்று விழாவுக்கு மேலும் சிறப்பூட்டின. இதன்போது, மறைந்த கலைச்சுடர் ஷக்காப் மௌலானாவின் கலைப்பணிகள், குணநலன்கள் மற்றும் அவரது வாழ்வியல் பங்களிப்புகள் தொடர்பாக அதிதிகள் பலரும் நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களின் அயராத சேவையைப் பாராட்டும் வகையில், அவர்களுக்கும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வை அறிவிப்பாளர்களான அலீம் மற்றும் எம்.பி.எம். றின்ஸான் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.













