அமெரிக்க நீதித்துறை (DOJ), குழந்தைகளின் இணையதள தனியுரிமை தொடர்பான சட்டங்களை TikTok நிறுவனம் மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்காக, TikTok மற்றும் அதன் தாய் நிறுவனமான ByteDance உள்ளிட்ட நிறுவனங்களுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உடன்பாட்டை எட்டியுள்ளது.
குழந்தைகளின் இணையதள தனியுரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களை TikTok நிறுவனம் மீறியதாகக் கூறி, அமெரிக்க நீதித்துறை 2024ஆம் ஆண்டு TikTok மற்றும் ByteDance மீது வழக்குத் தொடர்ந்திருந்தது.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வழக்கமான TikTok கணக்குகளை உருவாக்கவும், அந்தக் கணக்குகள் மூலம் குறுகிய காணொளிகளை உருவாக்கி பகிரவும், பெரியவர்கள் உள்ளிட்ட ஏனைய பயனர்களுடன் குறுந்தகவல்களைப் பரிமாறவும் TikTok நிறுவனம் தெரிந்தே அனுமதித்ததாக DOJ தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகளின் பெற்றோரிடமிருந்து உரிய அனுமதியைப் பெறாமல் அவர்களது தனிப்பட்ட தகவல்களை TikTok சேகரித்ததாகவும் அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
குழந்தைகளை இலக்காகக் கொண்ட இணைய சேவைகள், 13 வயதுக்குட்பட்ட பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கு முன்பு அவர்களின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என Children’s Online Privacy Protection Act (COPPA) சட்டம் வலியுறுத்துகிறது.
இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்காக TikTok நிறுவனம் அமெரிக்க நீதித்துறைக்கு 300 மில்லியன் டொலரை உடனடியாகவும், மேலும் 100 மில்லியன் டொலரை பின்னர் செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.
TikTok நிறுவனத்தின் முன்னைய நிறுவனமான Musical.ly உடன் மேற்கொள்ளப்பட்டிருந்த முந்தைய உடன்பாட்டை நீதிமன்றம் ரத்து செய்த பின்னர், இந்த 100 மில்லியன் டொலர் செலுத்தப்படவுள்ளது.
“இந்த உடன்பாடு அமெரிக்க குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான மிகப்பெரிய வெற்றியாகும். குழந்தைகள் இணையத்தில் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட நிறுவனங்கள் தங்களுடைய சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதையும் உறுதி செய்வதே திணைக்களத்தின் முன்னுரிமையாகும்” என அமெரிக்க இணை சட்டமா அதிபர் ஸ்டான்லி ஈ. வுட்வார்ட் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஜனவரி மாதம், அமெரிக்காவில் TikTok பயன்படுத்தும் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவுகளைப் பாதுகாப்பதற்கும், அந்த செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும், அமெரிக்க உரிமையாளர்களின் பெரும்பான்மையைக் கொண்ட கூட்டு நிறுவனத்தை உருவாக்க ByteDance ஒப்புக்கொண்டிருந்தது.
TikTok மீது நீதித்துறை வழக்குத் தொடர்ந்ததிலிருந்து, குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் நிறுவனம் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாக DOJ தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீதித்துறையின் சிவில் பிரிவின் உதவி சட்டமா அதிபர் பிரெட் ஷுமேட் தெரிவிக்கையில், “இந்த உடன்பாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. இது கணிசமான நிதி மீட்பை உறுதி செய்வதுடன், இந்த விவகாரத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருகிறது” என்றார்.








