மகாத்மா காந்தியின் அரிய கையெழுத்துப் பதிவுகளின் தொகுப்பு, மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.16.2 கோடிக்கு விற்பனையாகி, இந்திய வரலாற்று ஆவணம் ஒன்றுக்கான சாதனை விலையைப் பதிவு செய்துள்ளது.
1944 முதல் 1946ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மகாத்மா காந்தியால் எழுதப்பட்ட 688 கையெழுத்துப் பதிவுகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அகிம்சை, உண்மை மற்றும் சுயக்கட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான அவரது சிந்தனைகள் இதில் பதிவாகியுள்ளன.
பின்னர் இந்தக் குறிப்புகள் தொகுக்கப்பட்டு ‘A Thought for the Day’ என்ற நூலாக வெளியிடப்பட்டன. காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகளை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பை இந்தக் கையெழுத்துப் பதிவுகள் வழங்குகின்றன.
‘Gandhi: From the Collection of Anand T Hingorani’ என்ற தலைப்பில் இந்திய ஏல நிறுவனமான Saffronart இந்த ஏலத்தை நடத்தியது.
ஆனந்த் டி. ஹிங்கோரானி, சுதந்திரப் போராட்ட வீரரும், தனது 13 வயது முதல் மகாத்மா காந்தியைப் பின்பற்றியவருமாவார். 1930ஆம் ஆண்டு பிரித்தானியர்களின் உப்புவரிக்கு எதிராக காந்தி முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி நடைப்பயணத்தில் சிந்த் பிராந்தியத்திலிருந்து பங்கேற்றவர்களுள் அவரும் ஒருவர்.
அவர் சபர்மதி ஆசிரமத்தில் பணியாற்றியதுடன், சட்டமறுப்பு இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட காந்தியின் போராட்டங்களிலும் இணைந்திருந்தார்.
ஹிங்கோரானியின் மனைவி வித்யா உயிரிழந்த பின்னர், அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் காந்தி சுமார் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கடிதங்கள் எழுதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத் தொகுப்பில் காந்தியின் கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் ஹிங்கோரானி குடும்பத்தினரால் தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்ட தனிப்பட்ட பொருட்களும் இடம்பெற்றிருந்தன.
“காந்தி பொதுவெளியில் வலியுறுத்திய கொள்கைகளை அவர் தனது வாழ்வில் எவ்வாறு கடைப்பிடித்தார் என்பதை இந்தப் பதிவுகள் அரிய முறையில் வெளிப்படுத்துகின்றன. எனவே, இது அவரது சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொள்ள மிகவும் மதிப்புமிக்க ஆவணமாகும்” என Saffronart நிறுவனத்தின் இணை நிறுவனர் தினேஷ் வாசிராணி தெரிவித்துள்ளார்.
மேலும், கடவுள் மற்றும் பகவத் கீதை தொடர்பாக காந்தி எழுதிய குறிப்புகள், எடுத்துச் செல்லக்கூடிய ராட்டை, ராட்டையைப் பயன்படுத்துவதன் ஆன்மிக ஒழுக்கம் குறித்து எழுதப்பட்ட இரண்டு கடிதங்கள் உள்ளிட்டவையும் ஏலத்தில் இடம்பெற்றிருந்தன.
காந்தியின் தனிப்பட்ட பொருட்களான Peti Charkha எனப்படும் சிறிய ராட்டை மற்றும் அவரது West End கைக்கடிகாரம் ஆகியவையும் ஏலத்தில் இடம்பெற்றன.
“எங்கள் தந்தை ஆனந்த் டி. ஹிங்கோரானிக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பையும், காந்தியின் அசாதாரணமான வரலாற்று மரபையும் உலகுடன் பகிர்ந்துகொள்வதில் அவரது குடும்பமாகிய நாங்கள் பெருமையடைகிறோம்” என ஹிங்கோரானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தலைமுறைகளாக அன்புடன் பாதுகாக்கப்பட்ட இந்தப் பொருட்கள், இந்தியாவின் வரலாற்றிலும் சுதந்திரப் போராட்டத்திலும் இடம்பெற்ற முக்கியமான தருணங்களுக்கு சாட்சியமாக இருப்பதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஏலம் அரிய சேகரிப்புப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நிகழ்வு மட்டுமல்ல; இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச்சின்னங்களையும் காந்தியின் கொள்கைகளையும் உலகுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தக் கையெழுத்துப் பதிவுகளை வாங்கியவரின் அடையாளத்தை Saffronart இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









