களுத்துறை மாவட்டத்தின் பலாந்தை பிரதேச முஸ்லிம் சமூகத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் சமூகப் பங்களிப்பை ஆவணப்படுத்தும் “பலன்புர முஸ்லிம்கள்” நூல் எதிர்வரும் 2026 செப்டெம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பலாந்தை பிரதேசத்தில் வெளியிடப்படவுள்ளது.
மொஹமட் நஸ்ரான் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல், பலன்புர அல்லது பலாந்தை பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் வரலாறு, அவர்களின் சமய மற்றும் கலாசார அடையாளங்கள், சமூக மற்றும் கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தளபதியான வீதியபண்டார (Weediya Bandara) தொடர்பான வரலாற்றுப் பின்னணியுடனும் பலாந்தை பிரதேசத்திற்கு தொடர்பு காணப்படுகிறது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, வளர்ச்சி மற்றும் பங்களிப்புகளை ஆவணப்படுத்துவது இந்நூலின் முக்கியத்துவமாகும்.
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பலாந்தை, தனித்துவமான வரலாற்று மற்றும் கலாசார அடையாளங்களைக் கொண்ட பிரதேசமாக விளங்குகிறது. குறிப்பாக, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நல்லிணக்கத்தையும் இந்நூல் பதிவு செய்கிறது.
“பலன்புர முஸ்லிம்கள்” மொஹமட் நஸ்ரான் அவர்களின் முதலாவது நூலாகும். பிரதேசத்தின் வரலாறு, சமூக வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வியல் தொடர்பான முக்கிய தகவல்களை எதிர்கால சந்ததியினருக்காக ஆவணப்படுத்திப் பாதுகாப்பதே இந்நூல் வெளியீட்டின் பிரதான நோக்கமாகும்.
நூல் வெளியீட்டு நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிரதேச வரலாறு, கலாசாரப் பாரம்பரியம் மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பான முக்கிய தகவல்களை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் இந்நூல் வெளியீட்டு விழா, பலாந்தை பிரதேசத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.
நிகழ்வு விபரங்கள்:
திகதி: 2026 செப்டெம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.00 மணி
இடம்: பலாந்தை
ஆசிரியர்: மொஹமட் நஸ்ரான்










