முன்னாள் சிரிய இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரை கொலை மற்றும் சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்த லெபனான், அவரை சிரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.
2024ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், சிரிய இராணுவ அதிகாரி ஒருவர் லெபனானிலிருந்து சிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முதல் சம்பவம் இதுவாகும்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் அடெல் இசா ஆவார். 67 வயதான இவர், சிரிய இராணுவத்தின் 17ஆவது பிரிவின் முன்னாள் தளபதியாகவும், பின்னர் கிழக்கு மாகாணமான டெய்ர் எஸ்-சூர் பகுதியில் தரைப்படைகளின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் சிரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை சிரிய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை (19) உறுதிப்படுத்தியுள்ளது.
“இன்று, முன்னாள் ஆட்சியின் இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியான மேஜர் ஜெனரல் அடெல் இசாவை சிரிய அதிகாரிகள் லெபனான் அதிகாரிகளிடமிருந்து பொறுப்பேற்றுள்ளனர்” என சிரிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவில், வேண்டுமென்றே கொலை செய்தல், குற்றச் செயலைச் செய்ய உதவுதல், இரண்டுக்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்தல், மரணத்தை ஏற்படுத்திய சித்திரவதை, உள்நாட்டுப் போர் மற்றும் மதப் பிரிவினையைத் தூண்டும் நோக்கத்திலான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவரது வழக்கை டமாஸ்கஸில் உள்ள நீதிபதி விசாரிப்பார். பின்னர், வழக்கு விசாரணைக்காக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடெல் இசா மறுத்துள்ளதாக, அவரது கைது மற்றும் சிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறித்து அறிந்த இருவரை மேற்கோள்காட்டி சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி, பெய்ரூட்டில் உள்ள சிரிய தூதரகத்திற்கு ஆவணப் பணிகளை நிறைவேற்றச் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் சிரியாவில் தேடப்பட்டு வருவதாக தூதரக அதிகாரிகள் லெபனான் சட்டமா அதிபர் அலுவலகத்துக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, லெபனான் விசாரணை அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
அசாத் ஆட்சி 2024 டிசம்பரில் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, லெபனானில் தஞ்சமடைந்த முன்னாள் அரச அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு டமாஸ்கஸ் பல மாதங்களாக லெபனானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.
முன்னாள் கிளர்ச்சித் தலைவர் அஹ்மத் அல்-ஷரா தற்போது சிரியாவை வழிநடத்தி வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம், டமாஸ்கஸால் தேடப்பட்டு வந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் உயர் அதிகாரிகளின் பட்டியலை சிரிய அதிகாரிகள் லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கியிருந்தனர்.
இதேவேளை, இந்த மாத தொடக்கத்தில் டமாஸ்கஸ் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு எதிராக கொலை, தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதித்தது.
பஷார் அல்-அசாத் தற்போது ரஷ்யாவின் மொஸ்கோவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








