42ஆவது தேசிய மீலாதுன் நபி உத்தியோகபூர்வ அரச பெருவிழா 2026 தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (19) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் நிஹ்மத்துல்லா நிலூபர் ஆகியோர் இதில் கலந்துகொண்டு நிகழ்வுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.
அரச பெருவிழா எதிர்வரும் 26ஆம் திகதி நீர்கொழும்பு பெரியமுல்ல அல் ஹிலால் மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையொட்டி எதிர்வரும் 22ஆம் திகதி நீர்கொழும்பு போரத்தோட்ட அல் பலாஹ் கல்லூரியில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி நீர்கொழும்பு காமச்சோடை ஜும்மா பள்ளிவாசலில் மரநடுகை நிகழ்வும், 24ஆம் திகதி பெரியமுல்ல பெரிய ஜும்மா பள்ளிவாசலில் சகல சமூகத்தினருக்குமான திறந்தவெளி பள்ளிவாசல் பார்வையிடும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.
மேலும், கலாசாரக் கண்காட்சி, மீலாதுன் நபி ஞாபகார்த்த முத்திரை வெளியீடு, உலமாக்களுக்கான கௌரவிப்பு, மீலாதுன் நபியை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏ.எஸ்.எம். ஜாவித்








