மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை அமைச்சர் டி. சரத்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பெண்களின் நலன் மற்றும் சமூக நலனை முன்னிறுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நடைமுறையின்படி, இரண்டு உயிருடன் இருக்கும் குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பெண் அரச ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உயிருடன் இருந்தால், முழு சம்பளத்துடன் 12 வாரங்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கும் வகையில் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு 90 நாட்களிலிருந்து ஆறு மாதங்களாகவும், 2016ஆம் ஆண்டு ஒன்பது மாதங்களாகவும், 2021ஆம் ஆண்டு 365 நாட்களாகவும் அது அதிகரிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை அமர்வின்போது தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆர். பல்லவி தனது பிறந்த குழந்தையை சட்டப்பேரவைக்கு அழைத்து வந்திருந்த நிலையில், பணிபுரியும் தாய்மார்களுக்கான ஆதரவு தொடர்பில் இடம்பெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.







