தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சுமார் 30 வயதுடைய பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று (18) உயிரிழந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட எந்தவொரு நோயும் குறித்த தகவல் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட அவதானிப்புகளின் அடிப்படையில், வயது முதிர்வு காரணமாக இயற்கையான முறையில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த ஒட்டகச்சிவிங்கியின் பிரேதப் பரிசோதனை இன்று (19) மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுவாக ஒட்டகச்சிவிங்கிகள் காடுகளில் 20 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. எனினும், மிருகக்காட்சிசாலைகள் போன்ற பராமரிக்கப்பட்ட சூழலில் அவை அதைவிட நீண்ட காலம் உயிர்வாழக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், மேலும் இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளை 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவர எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








