உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நேற்று (18) பாராளுமன்றத்தில் முதலாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
முதலாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, இந்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என சவால் செய்ய விரும்பும் எவரும், சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியும்.
அவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டால், அதனை விசாரணைக்கு உட்படுத்தும் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை 21 நாட்களுக்குள் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும்.
இதனிடையே, நீதித்துறை (திருத்த) சட்டமூலமும் இன்று பாராளுமன்றத்தில் முதலாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
1978ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தைத் திருத்தும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், மேல் நீதிமன்றம், மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட ஏனைய நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.









