தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத 1,090 கிலோகிராம் கால்நடை மருந்துகள், சுமார் ரூ. 3 மில்லியன் பெறுமதியானவை, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் (DAPH) இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அழிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, DAPH-இல் பதிவு செய்யப்படாததுடன், தேவையான தரநிலைகளையும் பூர்த்தி செய்யாத இந்த மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
தரமற்ற மருந்துகளை விலங்குகளுக்கு பயன்படுத்துவது அவற்றின் சுகாதாரம் மற்றும் உயிருக்கு மட்டுமன்றி, இறைச்சி, பால் மற்றும் முட்டை போன்ற விலங்கு உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் விலங்கு நோய்கள் சட்டத்தின் 17ஆம் பிரிவை மீறும் குற்றமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
விசாரணைக்காக உற்பத்தியாளர் அழைக்கப்பட்ட நிலையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மருந்துகள் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் சத்தியப்பிரமாணப் பத்திரத்தையும் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட முழு மருந்துத் தொகையும் CAA மற்றும் DAPH அதிகாரிகளின் மேற்பார்வையில் கெரவலப்பிட்டிய மருத்துவக் கழிவு அகற்றும் நிலையத்தில் அழிக்கப்பட்டது. மருந்துகளை அழிப்பதற்கான முழுச் செலவையும் உற்பத்தியாளரே ஏற்றுக்கொண்டுள்ளார்.
செல்லப்பிராணிகள் அல்லது பண்ணை விலங்குகளுக்காக மருந்துகள், விட்டமின்கள் மற்றும் கால்நடைத் தீவனங்களை கொள்வனவு செய்யும் போது, அவை DAPH-இல் பதிவு செய்யப்பட்டுள்ளனவா, உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதி சரியாக குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்குமாறு CAA பொதுமக்களிடம் கோரியுள்ளது.
மேலும், முறையாக லேபிளிடப்பட்டு, தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்யுமாறும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








