2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம் வரிக்கு உட்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இவ்வருமானத்திற்கு வழமையான வருமான வரி வீதங்களான 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களில் வரி விதிக்கப்படாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், டிஜிட்டல் ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் ஊடாக சேவைகளை ஏற்றுமதி செய்து ஈட்டப்படும் வருமானத்திற்கு அதிகபட்சமாக 15 சதவீத வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டார்.
இதன்படி, டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சேவை ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டுபவர்கள், தமது வருமானத்தை முறையாக சுயமதிப்பீட்டு வரி அறிக்கையில் சமர்ப்பித்து, அதற்கான வரியை செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சாதாரண வருமானத்திற்கு விதிக்கப்படும் வரி வீதங்களுடன் ஒப்பிடுகையில், சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு குறைந்த வரி வீதமே பொருந்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, டிஜிட்டல் ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் சேவை ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டுபவர்கள், தமக்குப் பொருந்தும் 15 சதவீத வரியை செலுத்துவது அவர்களின் பொறுப்பு என ஹிரான் மெனேரிபிட்டிய மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு சேவை ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், அதற்கான வரியை உரிய முறையில் செலுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








